ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நீர் வாழ் உயிரி கள் அருங்காட்சியகம் ஒன்றில் முதல் முறையாக எறும்புத் தின்னி குட்டி போட்டுள்ளது. அந்தக் குட்டிக்கு இப்போது 5 மாதங்கள் ஆகிறது. காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள் இதைப் பார்ப்பதற்கு முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர். அந்தக் குட்டிதான் தனது இரண்டு கால்களால் இப்படி நடந்து வருகிறது.
ஜப்பானிய மொழியில் எறும்புத் தின்னிகளுக்கு `தமாண்டுவா' என்று பெயர். ஜப்பானிய நீர்வாழ் உயிரிகள் அருங்காட்சியகம் அல்லது விலங்கியல் பூங்கா ஒன்றில் எறும்புத் தின்னி குட்டி போட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
***
நீர்யானைகள் ஆப்பிரிக்கா கண்டத்தில்தான் பெரிதும் காணப்படுகின்றன. நிலத்தில் வாழும் விலங்கு களில் யானைக்கு அடுத்து இதுதான் மிகப்பெரிய விலங்கு. பெரும்பாலும் ஏரிகளில்தான் இவற்றைப் பார்க்க முடியும். ஆனால் நதி, நீரோடைகளில் வாழ்கிற நீர்யானைகளும் உண்டு. இந்த நீர் யானைகளை குள்ள நீர்யானைகள் என்பார்கள். இவை 1.5 மீட்டர் நீளமும் 0.8 மீட்டர் உயரமும் கொண்டவை. இவற்றின் மொத்த எடை 300 கிலோவுக்குள் இருக்கும். இவை லைபீரியா நாட்டில்தான் அதிகம் காணப்படுகிறது. பெரிய நீர் யானைகள் 4 மீட்டர் நீளம் கொண்டவை. தோள் பட்டை வரை 1,4 மீட்டர் உயரம் கொண்டது. அதிக பட்சம் வளரும் நீர்யானை 4 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
நீர் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை. ஒரு கூட்டத்தில் 20 முதல் 100 வரையிலான நீர் யானைகள் இருக்கும். இவை கொட்டாவி விட்டால் அது டேஞ்சர் என்று அர்த்தம். அது எதிரியைத் எந்த நேரத்திலும் தாக்கலாம்.
***
சராசரி மனிதர்களைப் போல் 3 மடங்கு உயரம் வளரும் ஒட்டகச்சிவிங்களால் தண்ணீர் குடிக்காமல் இரண்டு வாரம் வரை உயிர் வாழ முடியும். ஆழ்ந்த தூக்கம் என்றால் அது ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிகக் குறைவுதான். நின்று கொண்டே அவற்றால் தூங்க முடியாது. இதனால் அவ்வப்போது தூங்கி எழுந்து கொள்ளும். தரையில் நான்கு கால்களையும் பரப்பி வைத்து தலையைக் கீழே வைத்த நிலையில்தான் ஒட்டகச் சிவிங்கிகள் தூங்க முடியும். அந்தத் தூக்கமும் கூட சில நிமிடங்கள்தான். குட்டி பிறந்த ஒரு சில மணி நேரங்களில் எழுந்து நிற்க முடியும். தாயுடன் குட்டி 15 மாதங்கள் வரைசேர்ந்தே வாழும்.
சிங்கமும், சிறுத்தையும்தான் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு கிலி தருபவை. தனியாக இருந்தால் இந்த இரண்டு மிருகங்களும் தங்களை வேட்டையாடித் தின்று விடும் என்பதால் புத்திசாலித் தனமாக வரிக்குதிரை மான் போன்ற பிராணிகளின் கூட்டத்தினருடன் சேர்ந்தே காணப்படும்.
***
பூச்சிகளின் உடலிலிருந்து `பெரமோன்' என்னும் மணம் தரும் பொருள் தோன்றுகிறது. இப்பொருள் தரும் மணத்தின் மூலம் அவை ஒன்றோடு ஒன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. பெரமோன் ரசாயனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ள. இந்த மணத்தின் மூலம் வரும் ஆணைகளை பூச்சிகள் மீறுவதே கிடையாது.
வண்ணத்துப் பூச்சிகள், விட்டில்கள்,சிலந்திகள், தட்டான் பூச்சிகள், சில வகை வண்டுகள்,கொசுக்கள், முதுகெலும்பற்ற சில விலங்கினங்கள் ஆகியவை பெரமோன் மணத்தின் மூலம்தொடர்பு கொள்கின்றன. இத்தகைய ரசாயன சமிக்ஞைகள் பல மீட்டர் தூரத்திற்குக் கூட பரவும் சக்தி கொண்டது.
***
தாமஸ் ஆல்வர் எடிசன் மாதத்திற்கு இரண்டு கண்டுபிடிப்புகள் வீதம் 40 ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரத்து 39 புதிய பொருள்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கான கண்டுபிடிப்பு உரிமையையும் பெற்றார். உலகில் வேறு எந்தக் கண்டுபிடிப்பாளருக்கும் இத்தகைய பெருமை இல்லை. மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளி சென்ற இவரின் 12-ஆவது வயது முதல் எடிசனுக்கு காதும் கேட்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
***
எறும்பில் பல இனம் உண்டு. ஒவ்வொரு வகையிலும் மூன்று சந்ததிகள். பார்த்தால் எறும்பு மாதிரி இருக்காது. நீண்ட பெரிய வயிறு இருக்கும். இதுதான் எறும்பு. ஒரு புற்றில் ஒரு ராணிதான் இருக்கும். இரண்டாவதாக வீரர்கள். இதன் வேலை புற்றைக் காப்பாற்றுவது. இவைதான் நம்மை நறுக்கென்று கடிப்பது. இதன் வாயில் பார்மிக் அமிலம் இருப்பதால், தோலில் பட்டதும் அரிப்பு எடுக்கும். மூன்றாவது வேலைக்கார எறும்புகள். இதுதான் எண்ணிக்கையில் அதிகம்.
இரை தேடுவது, முட்டைகளை எடுத்துச் செல்வது, புற்றை விரிவாக்கம் செய்வது என்று சகல வேலைகளையும் யார் கட்டளையும் இல்லாமல் செய்யும். இவை மனிதர்களை கடிப்பதில்லை. பாவம் வாயில்லா பூச்சிகள்.
***
1960-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து கடல் பொறியியல் வல்லுனர்கள் பிக்கார்ட்,லெப்டினன்ட் வெல்ஸ், ஆகிய இரண்டு பேரும் கடலில் 35 ஆயிரத்து 800 அடி ஆழத்தில் வாளைமீன்கள் போன்ற உயிரினங்கள் இருப்பதை படம் பிடித்து வந்துள்ளனர். அது நாள்வரை பெரும்பாலான கடல் ஆய்வாளர்கள் ஆயிரத்து 800 அடி வரை மட்டுமே உயிரினங்கள் வாழ முடியும் என்று நம்பி இருந்தனர்.