Aug 2, 2008

நெஞ்சு எரிச்சல்

பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை "நெஞ்சு எரிச்சல் 'நோய்' (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு 'நெஞ்சு எரிச்சல் நோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம்.

நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள்கள். உணவு செரிமானம் வாயிலிருந்தே துவங்கி விடும். வாயில் உள்ள உமிழ் நீர் மாவுச்சத்தை செரிக்கத் துவங்கும். அதேபோல் வயிற்றில் சுரக்கும் வயிற்று நீர் (Gastric Juice) மாவுச் சத்து, புரதச் சத்து ஆகியவற்றை செரிக்க வைக்கும். வயிற்று நீரில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சின், இன்ட்ரின்சிக் ஃபேக்டர், மியூகஸ் ஆகியவை உள்ளன.

இதில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சினும், நரம்பு தூண்டுதலால் சுரப்பவை. நம் உடலில் மாவுச் சத்து குறையும் பொழுது, சர்க்கரையின் அளவு குறையும். இதை 'ஹைப்போ கிளைசிமியா என்று சொல்லுவோம். இந்த நிலை ஏற்பட்டால் 'வேகஸ்' என்ற நரம்பு தூண்டப்படும். இந்த நரம்புதான் வயிற்றிற்கு செல்லும் நரம்பு. உணவின் வாசனை, உணவைப் பார்த்தல் ஆகிய செயல்பாடுகளும் இந்த நரம்பை தூண்டிவிடும். இதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பு உண்டாகும். இதுவே பசி உணர்வாக நமக்கு வெளிப்படும்.

சாதாரணமாக இந்த அமிலச் சுரப்பு பசி எடுக்கும் நிலையை உண்டாக்கினாலும், உணவு உட்கொண்ட பின் நின்று விடும். நெஞ்சு எரிச்சல் நோய் உள்ளவர்களுக்கு இந்த அமிலச் சுரப்பு அடிக்கடி ஏற்பட்டு, உணவுக் குழல் புண்ணாகி, சுருங்கி விடும் நிலைகூட ஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு எரிச்சல், இதய எரிச்சல் என குழப்பத்தை ஏற்படுத்தும். இதயத் தமனி சுருக்கம் சில நேரங்களில் இதேபோன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். உடனே மாரடைப்பு என நினைத்து சிலர் அதற்கு மருத்துவம் செய்யும் நிலை ஏற்படும்.

'ஆஸ்பிரின்' மருந்து மாரடைப்புக்கு கொடுக்கும் மருந்தாகும். ஆனால் இதே மருந்து நெஞ்சு எரிச்சல் நோய்க்குக் கொடுத்தால், நெஞ்சு எரிச்சல் நோய் மிகவும் அதிகமாகி விடும். அதேபோல் இதயநோயை, நெஞ்சு எரிச்சல்தான் என்று அசட்டையாக நினைத்து சரியான மருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே சரியான ஆய்வுகள் மூலம் இதயநோயா அல்லது நெஞ்சு எரிச்சல் நோயா எனக் கண்டுபிடித்து மருத்துவம் செய்தல் அவசியம்.

நோய் காரணீயம்: நெங்சு எரிச்சல் நோய் சாதாரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் சில நோயாளிகளுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்படும். வயிய்றழற்சி போன்ற நோயுள்ளவர்களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்டும். வயிற்றழற்சி உள்ளவர்களின் உணவுக் குழயில் உள்ள சுருக்குத் தசைகள் சரியாக வேலை செய்யாததால் அமிலச் சுரப்பு மேல் நோக்கி செல்லும் நிலை ஏற்படும். சாதாரண நிலையில் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில், உணவும் மற்ற சுரப்பிகளும் கீழ்நோக்கியே செல்லும். ஆனால் நெங்சு எரிச்சல் நோயில் சுருக்குத் தசை செயல்பாடு குறைப்பாட்டால் அமிலச் சுரப்பு மேல் நோக்கிச் சென்று எரிச்சலை ஏற்படுத்தும்.

நோயின் அறிகுறிகள்: நெஞ்சு எரிச்சல் நோயில் அடிப்படை அறிகுறியே நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவதுதான். நெஞ்சு எலும்புக்கு பின்புறம் நெஞ்சு கரிப்பாகத் தோன்றும் இந்நோய் நாளடைவில் எரிச்சலாக மாறும். சிலருக்கு உணவுக்கு பின் அதிகளவில் எரிச்சல் ஏற்படும். வயிறு நிறைய உணவு உண்டாலும் அதிகளவு உண்டாகும். வயிறு முட்ட உணவு உண்டுவிட்டு, உடனே படுக்கைக்குச் சென்றால் எரிச்சல் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும். மசாலா கலந்த மாமிச உணவு, மது, பீடி, சிகரெட் போன்றவை இந்நோயை அதிக அளவு உண்டாக்கும். படுத்திருக்கும் நிலை, வயிற்றை அழுக்கிக் கொண்டு குனிந்து வேலை செய்வர்களுக்கு அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

உணவு உண்டபின் எரிச்சல் ஏற்படுவதோடு அன்றி புளி ஏப்பம் உண்டாகும். அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவை உண்டாகும். சில சமயங்களில் தூங்கும் பொழுது புரை ஏறுதல், இருமல் உண்டாதல் ஆகிய நிலைகளோடு சேர்ந்து நெஞ்சு எரிச்சலும் ஏற்படும். இந்நோயுள்ளோர் படுக்கைக்கு அருகிலேயே தண்ணீர், பால் வைத்திருந்து, அதை குடித்தால், எரிச்சல் குறையும். முறையான மருத்துவம் செய்து கொள்ளாமல் விட்டால், நாளடைவில் உணவு நெஞ்சிலேயே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். தொண்டை அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் தொண்டை வரை பரவும். அதனால் கழுத்துப் பகுதியில் எரிச்சல் உள்ள உணர்வு தோன்றும். உணவுக் குழலின் பகுதிகளில் புண்ணாகி சுழற்சி ஏற்படும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

நோயறிதல்: நோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோயை எளிதில் கண்டு பிடிக்கலாம். இதய நோயா இல்லையா என்பதை இதய மின் பதிவில் கண்டு பிடிக்கலாம். 'உள்நோக்கி' முறையில் எளிதாக அறியலாம். சாதாரணமாக உணவுக் குழலை உள்நோக்கி வழியாகப் பார்த்தால் அது உலர்ந்த நிலையில் இருக்கும். அதுவே நெஞ்சு எரிச்சல் நோயுள்ளவர்களுக்கோ, மூச்சு விடும் பொழுதெல்லாம் (ஏற்படும் நெஞ்சு சதைப் பகுதி அழுத்தப்படுவதால்) வயிற்றில் உள்ள பொருள்கள் மேலும் கீழும் வந்த வண்ணம் இருக்கும். சிலருக்கு உணவுக் குழாயில் உள்ள புண்களையும் உள்நோக்கி வழியே, தெளிவாக காண முடியும். உணவுக் குழாய் சுருக்கம், அழற்சி ஆகியவற்றையும் உள்நோக்கி வழியே காணலாம்.

உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். இந்நோயை கட்டுப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அதிக அளவு வயிறு முட்ட உண்ணாமல் அளவோடு உண்ண வேண்டும். மசாலா, எண்ணெய், கொழுப்பு உணவுகள், சாக்லெட்டுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அதிகம் குடிப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்த்தல் நலம். பீடி, சிகரெட், மது போன்றவை இந்நோயை அதிகமாக்குவதால் அதை அடியோடு நிறுத்துவது நலம் பயக்கும்.

உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்லாமல் கொஞ்ச நேரம் நடத்தல் அல்லது அமர்ந்திருத்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அமில அதிர்ப்பான்காள 'டைஜின்' 'ஜெலுசில்' போன்ற மருந்துகள் நல்ல பலனைத் தரும். நரம்புத் தூண்டுதலை குறைகின்றதன் மூலம் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. நேரத்திற்கு உணவு உண்ணுதல், அமிலச் சுரப்பைத் துண்டாத உணவுப் பழக்கங்கள் உணவு உண்டதும் லேசான நடைப்பயிற்சி. உடனே உறங்கச் செல்லாமை ஆகியவை நம்மை இந்நோயிலிருந்து காக்க உதவும். ஆரம்ப நிலையில் சரியான மருத்துவம் செய்துகொள்ளாத நோயாளிகளுக்கு நோயின் கடுமை அதிகரிக்கும். அவர்களுக்குக் கூட உள்நோக்கி வழியாகவே மாறிவரும் மருத்துவ அறிவியலில் உள்நோக்கி வழியாகக் செய்யும் இம்மருத்துவம் மிகவும் எளிமையானதாகும்.

நன்றி: உண்மை இருமாத இதழ்

blog comments powered by Disqus

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது