*மன நலம் நல்கும் 'ஹாஸ்ய யோகா'! *
'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்' என்பதை எவராலும் மறுக்க இயலாது.
இந்த எளிய வழியினால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, மன நலமும் காக்கப்படும்
என்பது தனிச் சிறப்பாகும்.
வேலைப் பளு நிறைந்த சூழலில், மன அழுத்தம், பதற்றம் முதலிய மனநல பாதிப்புகள்
எங்கெங்கும் நிறைந்திருக்கின்றன.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட, உளவியல் மருத்துவர்கள் பலரும் பரிந்துரைக்கும்
ஒன்றாகவே 'ஹாஸ்ய யோகா' உள்ளது.
'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ
நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்' என்று யோகா ஆசிரியர் ஒருவர்
கூறுகிறார்.
இப்படி சிரிப்பில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காமல், 'தொடர்ந்து 20 நொடிகளுக்கு
வாய்விட்டு, வயிறு வலிக்க சிரித்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது' என்கிறது
ஓர் ஆய்வு.
மன அழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்டவற்றை போக்கவல்ல 'ஹாஸ்ய யோகா', நோய்
எதிர்ப்பு சக்திக்கும், இதயத்தின் இயக்கத்துக்கும், தசைகள் வலுவாக
இருப்பதற்கும் துணைபுரிகிறது.
இத்தகையை வல்லமை கொண்ட சிரிப்பை தினம் தினம் சிந்திக் கொண்டே இருப்பது சாலச்
சிறந்தது. இந்த விஷயத்தில், 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் வரும் பிரகாஷ்
ராஜ் கதாப்பாத்திரத்தை பின்பற்றுவதும் தவறில்லை.